திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை வட்டம் கன்னிகைபேர் புன்னப்பாக்கம் கிராமத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் அப்போது அவர்கள் கூறியதாவது:-

புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 163 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீர் இங்கு வசிக்கும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் விவசாய தேவைக்கும், கால்நடை பராமரிப்புக்கும் பெரும் உதவியாக உள்ளது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் நீர் தேவைக்கும் ஆதாரமாக உள்ளது.
 
இந்த நிலையில் இங்குள்ள ஏரியிலிருந்து அரசு அனுமதியுடன் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுத்துச் செல்லப்படுவதால் இங்குள்ள மரங்கள் முழுவதும் அழிக்கப்பட்டு வருகிறது.
 
எனவே பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் புன்னப்பாக்கம் ஏரியிலிருந்து சவுடு மண் எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
 
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பா. பொன்னையாவிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here