இயக்குனர் அட்வைட் சந்தன் இயக்கத்தில் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா என பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘லால் சிங் சத்தா’. இப்படத்தினை நடிகர் அமீர் கான் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிதம் மற்றும் தனுஜ் திக்கு இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் கெய்ன்ட் மூவிஸ்’ தயாரிப்பு நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
இந்தப் படத்தின் தொடக்கத்தில் லால் சிங் சத்தாவாக நடித்துள்ள அமீர்கான், ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன் கதையை சொல்ல தொடங்குகிறார். அந்த கதை, துள்ளாத மனமும் துள்ளும் படம் போல Pre Climax வரை நீள்கிறது. லால் சிங் கதாபாத்திரத்தின் சிறு வயது முதல், அவரின் மகன் பள்ளி செல்வது வரை நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்த காட்சிகளாக வருகின்றன.
எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்துகொள்ளும் திறமை கொண்ட லால் சிங்கிற்கு நடக்க முடியவில்லை. ஆனா மருத்துவர் அவரின் பிரச்னை காலில் இல்லை, எண்ணத்தில் உள்ளது என்கிறார். அந்த சிறுவன் காதலில் விழுகிறார்! ராணுவத்தில் சேர்ந்து சாதனை செய்கிறார்! பள்ளியில் சக மாணவர்கள் லால் சிங்கை புறக்கணிக்கும் போது, ரூபா என்ற மாணவி ஆதரவு கொடுக்கிறார்.
அந்த நட்பு கல்லூரி காலம் வரை தொடர்கிறது. லால் சிங்கிற்கு உறுதுணையாக இருக்கும் ரூபா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கிறார். மனநிலையில் சற்று பிரச்னை இருந்தாலும் அவர் மீது தொடர்ந்து அன்பு செலுத்துகிறார் லால். பிறகு மிகப்பெரிய தொழிலதிபராகிறார்! அது எப்படி சாத்தியம் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் தாண்டி, ஹாலிவுட்டிலிருந்து மிதந்து வந்த அந்த வெண்சிறகு ஆமீர்கானிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தின் உயிரே அதன் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என ‘லால் சிங் சத்தா’ கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான்.
குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது. ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என தொழில்நுட்ப நேர்த்தி படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களான சிறந்த காட்சி அனுபவத்திற்கு உதவியுள்ளது. பிரித்தமின் பிண்ணனி இசை எமோஷனல் காட்சிகளில் காதுகளுக்குள் கரைகிறது.
இரண்டாம் பாதியில் கதை மெதுவாக செல்வது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த ‘லால் சிங் சத்தா’ காதல் மயக்கத்தின் வெற்றி.