குற்றாலத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யும் காலமான ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலங்ளாகும். ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை காலதாமதமாக ஜூலை மாதத்தில் தற்போது துவங்கியுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சீரான நீர்வரத்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிற நிலையில், குற்றாலத்தை மட்டுமே நம்பியுள்ள தங்கும் விடுதி, உணவுவிடுதி, பழவியாபாரம், மூலிகைத் தைலம் வியாபாரம், ஆயில் மஜாஜ் என அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா விற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு தடை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், குற்றாலத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடையை தமிழக அரசு இன்னும் விலக்கி கொள்ளாமல் நீடித்து வருகிறது.
இதனால் குற்றாலத்தின் அழகை ரசிக்க குடும்பத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைகளில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் அருவிகளின் அழகை மட்டுமே கண்டு ரசிப்பதுடன், செல்போன்களில் செல்பி எடுத்து செல்கின்றனர்.
தமிழகத்தின் பல சுற்றுலா தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் அருவிக்கரைகள் வெறிச் சோடி காணப்படுகிறது. வரலாற்று புகழ் பெற்ற குற்றாலம் தற்போது சீசன் காலங்களில் போதியளவு நீர் வரத்து இருந்தும் அரசின் தடையால் கலை இழந்து காணப்படுகிறது.
குற்றாலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்குமா? அருவிகளில் ஆனந்த குளியல் போட காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் எண்ணம் ஈடேருமா பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.