- மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர்கள், மனிதர்கள், உயிரினங்கள், தன் பக்தர்கள், இந்த உலகம் என எல்லாவற்றையும் காக்கும் பொருட்டு பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
- அவற்றில் இதிகாசமாக ஸ்ரீ ராமரின் அவதாரத்தை ராமாயணமாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தையும், தர்மத்தை நிலைநாட்டக்கூடிய மகாபாரதம் என கொண்டாடப்படுகிறது.
- மகாபாரத போரின் போது, அர்ஜுனனிடம் தர்மங்களை உணர்த்திய தருணத்தை, நாம் இன்றும் இந்து சமயத்தின் புனித நூலாக பகவத்கீதை என்ற பெயரில் படித்து வருகிறோம்.
கிருஷ்ண அவதாரத்தின் போது அவரின் லீலைகள் மக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் படி இருந்தது. அதே சமயம் மக்களுக்கே தெரியாமல், அவரின் லீலைகள் மூலம் அரக்கர்களை அழித்தல், சமுதாயத்தைக் காத்தல் என பல விஷயங்களை செய்து மக்களை காத்தருளினார்.
கிருஷ்ணா, கண்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.
கிருஷ்ண ஜெயந்தி எப்போது என்பதைப் பார்த்துவிட்டு, அவர் பிறந்த கதையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி அன்று கிருஷ்ணர் அவதரித்த நந்நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டு ஆவணி 14, ஆகஸ்ட் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும். அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.
அஷ்டமி திதி ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 11.57 மணிக்கு தொடங்குங்கி, ஆகஸ்ட் 30 நள்ளிரவு 1.57 மணி வரை இருப்பதால் 30ம் தேதி எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து, எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமே.
குறிப்பாக அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நல்ல நேரம்
நல்ல நேரம் – காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை
கெளரி நல்ல நேரம்
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை
இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது.
கிருஷ்ணருக்கு வெண்ணெய் உட்பட இனிப்பு பலகாரங்கள் பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு, பூஜையில் வெண்ணெய் இடம்பெறுவது அவசியம்.
அதே போல் குசேலனின் அன்பை, அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.
கிருஷ்ண தினத்தில் செய்ய வேண்டியது என்ன?
இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து உண்ணா விரதமிருந்து அவரது நாமங்களைச் சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடி வழிபடுவது வழக்கம்.
கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம்.
கிருஷ்ணன் பிறந்த கதை :
கம்சன் எனும் அரக்கனின் மரணம், தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் 8வது குழந்தையின் கைகளால் தான் ஏற்படும் என, வசுதேவர் – தேவகி திருமணம் முடிந்து அரண்மனைக்குச் செல்லும் போது கேட்டது.
தன்னை அனைவரும் கடவுளாக போற்ற வேண்டும் என விரும்பிய கம்சன், உடனே வசுதேவர் – தேவகியை சிறையில் அடைத்தார். அவர்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொன்றான்.
எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணரைக் காப்பாற்ற யமுனை நதியைக் கடந்து கோகுலத்தில், யாதவ குலத்தை சேர்ந்த நந்தகோபர் – யசோதையிடம் சேர்த்தார் வசுதேவர்.
கோகுலத்தில் அனைவரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து பல அற்புதங்கள், லீலைகளை நிகழ்த்தினார் கிருஷ்ண பரமாத்மா. வளர்ந்து இளைஞன் ஆனதும் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரத போர் என கிருஷ்ணரின் லீலைகள் நீண்டு கொண்டே செல்கிறது.