சென்னை கோயம்பேடு காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்க தலைவர் ராஜசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது கட்டப்பட்டதன் நோக்கம் நூறாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக செயல்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று சுமார் 150 ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த வணிக வளாக கடைகள் அனைத்தும் சுயநிதி திட்டத்தின் கீழ் உலக வங்கியிடம் கடன் வாங்கி அனைவராலும் முழுத்தொகையும் தவணை முறையில் கட்டப்பட்டு சொந்த கடைகளாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். தினசரி 8 ஆயிரம் டன் உணவு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனுடைய வளர்ச்சிக்காக அரசு பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ரூ.20 கோடியும், இந்த ஆண்டு ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற போவதாக தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகளே தவிர உண்மை இல்லை. இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டபோது, இது சம்பந்தமாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி விட்டனர்.

மார்க்கெட்டுக்குள் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தருவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இரவில் லாரிகள் வந்து செல்வதால் கோயம்பேட்டில் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதில்லை. பிற வாகனங்களால் தான் கோயம்பேட்டில் போக்குவரத்து குளறுபடி ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here