கொடை படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்மமுத்து, சுவாமிநாதன், கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா என படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் , அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கொடைக்கானலில் இருக்கும் பைனான்ஸியரிடம் இந்த பணத்தை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வாங்கி வர சொல்கிறார்.
கதாநாயகனும் கொடைக்கானலில் இருக்கும் பெரிய பைனான்ஸியரிடம் பணத்தை கொடுக்கிறார், ஆனால் அந்த பைனான்ஸியர் கதாநாயகனை ஏமாற்றி விடுகிறார், கடைசியில் கதாநாயகன் அந்த பணத்தை திரும்ப வாங்கினாரா ? இல்லையா ?என்பதும் ஆசிரமத்தின் பணத்தேவையை எப்படி பூர்த்தி செய்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை….
நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் அனயா, குடும்ப பாங்கான முகம். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரோபோ சங்கர், படம் முழுவதும் வருகிறார். ரோபோ சங்கர் கவுண்டர் மிகப்பெரிய அளவில் எடுபடவில்லை ஆனாலும் சின்ன சிரிப்பு இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் அஜய் ரத்தினம், கொடூர வில்லனாக தன்னை அடையாளப்படுத்த வெறித்தனமாக நடித்திருக்கிறார். கதை கொடைக்கானலில் நடப்பதால் கொடை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
சுபாஷ் கவியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. நாயகனின் ஒருதலை காதல், சமூக சேவை மற்றும் மோசடி கும்பலிடம் இருந்து சாமர்த்தியமாக பணத்தை கைப்பற்றுவது, என ஒரு முழுமையான கமர்சியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கதையில் இருக்கிறது.
முதல் பாதியில் சற்று தடுமாற்றமடைந்திருக்கும் இயக்குநர் இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸில் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதோடு, இரண்டாம் பாகம் இருப்பது போல படத்தையும் முடித்திருக்கிறார். இப்படம் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கை மற்றும் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது.
மொத்தத்தில் ‘கொடை’ ஒரு முறை சுற்றி வரலாம்….