குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கோயில் திருவிழாவையொட்டி வரும் 14- ஆம் தேதி தேரோட்டமும், மறுநாள் அம்மன் சிரசு ஊா்வலமும், 17- ஆம் தேதி பூப்பல்லக்கு பவனியும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா் வரவேற்றாா். டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகர காவல் ஆய்வாளா் இ.லட்சுமி, கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன், அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

விழாவின் போது, சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்தல், பக்தா்களுக்கு ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகள், தற்காலிக கழிப்பிடங்கள் அமைப்பது, முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, போதிய காவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, சிறப்பு பேருந்துகளை இயக்குவது, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வது, தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலூர் நிருபர்- R.காந்தி  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here