பெருந்தலைவர் காமராசரின் வாழ்கை வரலாறு:
 

நம் எல்லோராலும் காமராசர் என அறியப்பட்ட “கர்ம வீரர் காமராசர்” இயற்பெயர் “காமாட்சி”, அது அவரின் குலதெய்வத்தின் பெயர் ஆகும். காமராசர் காமாட்சியாக, குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தது 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள். அவருக்கு நாகம்மாள் என்ற ஒரு தங்கை இருந்தது பலருக்கு தெரியாது.

காமராசரின் தனி வாழ்க்கை:

காமராசர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார் ஆகையால் அவர் 6-ஆம் வகுப்பில் தன் கல்விப்படிப்பை நிறுத்தி தனது மாமாவின் துணிக்கடையில் தனது வாழ்க்கைப்படிப்பை தொடங்கினார். தனது 16வது வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணி செய்ய தொடங்கியவர் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை, தனது ஆயுள் முழுவதையும் நாட்டுக்காகவும், நாட்டுமக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் நம் பெருந்தலைவர்.

காமராசரின் சிறை வாழ்க்கை:

 
துணிக்கடையில் நேர்த்தியாக தன் வேலையை செய்த காமராசர் வரதராஜ நாயுடு, ராஜாஜி போன்றோரின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் மற்றும் சுதந்திர போராட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், காமராசர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றது 1930 – இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கு, ஆகத்து புரட்சி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு போன்ற பல்வேறு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது ஆண்டு இளம் வாழ்க்கையை சிறையில் கழித்தார் நம் பெருமைக்குரிய கிங்மேக்கர் காமராசர்.
 
 
தமிழக தலைவராக தமிழன் காமராசர்:
 

1947 – இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் நம் விடுதலைப் போராட்ட வீரர் காமராசர். தனது பெரும் தியாகத்தாலும் சலியாத உழைப்பாலும் 1952 – ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இரண்டு ஆண்டு கால பொற்கால ஆட்சியின் பலனாக 1954 -இல் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் காமராசர். தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி பெரும் செல்வாக்கை பெற மிக முக்கியமான கர்த்தாவாக திகழ்தவர் நம் காமராசர்.

காமராசரின் சாதனைகள்:

காமராசர் தனது 9 ஆண்டு கால முதல்வர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் அமைந்தது , தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்த ஒரே தலைவர் நம் படிக்காத மேதை காமராசர் தான், அவரின் சாதனைகள் சிலவற்றை நாம் பாப்போம். அதிகம் படிக்காத நம் பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30000க்கும் மேல் பள்ளிகள் தொடங்கினார், பள்ளிகள் தொடங்கினால் போதுமா மாணவர்கள் வேண்டாமா? அதற்கு அவர் செய்த தந்திரம் தான் இலவச மதிய உணவுத் திட்டம், தன் பிள்ளையாவது பசி இல்லாமல் இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பிய பெற்றோரே அதிகம், 7% ஆக இருந்த கற்போரின் எண்ணிக்கையை 37% ஆக மாற்றி புன்னகைத்தவர் தான் நம் புரட்சிதலைவர் காமசாரர், பள்ளி, கல்வி மட்டும் போதுமா வேலை வேண்டாமா என யோசித்தவர் பல புது புது தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். கல்வி, தொழில் என்று மட்டும் நின்று விடாமல் மின் திட்டம், நீர் பாசன திட்டம் போன்றவற்றிலும் காமசாரர் தனது சிறப்பான பணியை ஆற்றினார் என்று கூறவேண்டும்.

காமராசர் ஏன் திருமணம் செய்யவில்லை:

அன்று பலரது மனத்திலும் ஓடிய கேள்வி வயசாகி கொண்டே போகிறதே ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை, நாட்டின் முதல்வருக்கு பெண் தர யாரும் முன்வரவில்லையா என்றே, இதனை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு இல்லை, இங்கிலாந்து ராணி நேரடியாக கேட்டார், சிறிது கூட யோசிக்காமல் இன்றும் என் வீட்டில்(நாட்டில்) பல பேர் திருமண வயதாகியும் கல்யாணம் செய்யாமல் வறுமையில் இருக்க நான் மட்டும் எப்படி மணம் முடிக்க முடியும் என் சமூகத்தில் தங்கைக்கு தான் முதலில் முடிக்கும் வழக்கம் என்றார். நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி யாருக்கும் வராது.

காமராசரின் இறப்பும் தேசத்தின் இழப்பும்:

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here