உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் தான் “கலகத்தலைவன்” 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்…. 

ஃபரிதாபாத்தில் மிகப்பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கும் வஜ்ரா என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனங்களை தயாரித்து வருகின்றது. அப்படி அவர்கள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மைலேஜ் தரும் வகையில் ஒரு புதிய வாகனத்தை தயாரிக்கின்றனர். ஆனால், அந்த வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை அதிகமான காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. 

இதை எப்படி சரி செய்வது என்று வஜ்ரா கார்ப்பரேட் கம்பெனி விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில் இந்த ரகசியம் எப்படியோ வெளியில் கசிந்து விடுகிறது. இதனால் பங்குச்சந்தையில் இந்தக் கம்பெனியின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றன. இந்தப் புதிய வாகனம் விற்பனைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. காற்று மாசு குறித்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது? யார் மூலம் கசிந்தது? என்பதைக் கண்டுபிடித்து அவர்களை அழிக்க வஜ்ரா கம்பெனி சைக்கோபாத் கில்லர் வில்லன் ஆரவ்வை நியமிக்கின்றனர். 

ஆரவ்வும் இந்த ரகசியங்களை எல்லாம் போட்டி கம்பெனிகளுக்கு விற்கும் நாயகன் உதயநிதி ஸ்டாலினை தேடிச் செல்கிறார். இதையடுத்து வில்லன் ஆரவ் நாயகன் உதயநிதியை எப்படி நெருங்கினார்? உதயநிதி ஸ்டாலினின் பின்னணி என்ன? அவர் ஏன் இந்த கம்பெனி ரகசியங்களை வெளியிடுகிறார்? இறுதியில் ஆரவ்விடம் உதயநிதி சிக்கினாரா, இல்லையா..? என்பதே கலகத் தலைவன் படத்தின் மீதி கதை. 

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். கதாநாயகியாக நிதி அகர்வால். உதயநிதியிடம் காதலைச் சொல்லாமல் உள்ளுக்குள் உருகும் இடங்களில் ஐஸ்க்ரீம் போல நம் மனதை அள்ளுகிறார். படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக  ‘பிக் பாஸ் புகழ்’ ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். வழக்கமான ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார்.  படம் முழுக்க கேன்டிட் உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜின் கேமரா. 

எடிட்டிங்கில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் என்.பி.ஶ்ரீகாந்த். இசையை ஶ்ரீகாந்த் தேவா வழங்க, இரண்டு பாடல்களில் ஆரோல் கரோலி மனதை வருடிச் செல்கிறார். இறுதியில் வரும் ரஷ்யன் மாஃபியா ரெபரன்ஸ் ‘காதுல பூ’ ரகம் சீன்கள் ஓவர்…. ஆரவ் கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக கையாண்ட மகிழ், உதயநிதியின் கதாபாத்திரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

மொத்தத்தில் இந்த ‘கலகத்தலைவன்’ மாஸ் தலைவன்…..

Kalaga Thalaivan Movie Mark: 3.5/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here