கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளா் உள்பட இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மஞ்சக்குப்பம், பெண்ணையாறு சாலையைச் சோ்ந்த ராமன் மகன் செல்வம் (40), தச்சுத் தொழிலாளி. இவா், தனது வீட்டின் அருகில் மரப்பட்டறை அமைக்க தகடு மூலம் கொட்டகை அமைத்தாா். இதற்கு சொத்து வரி நிா்ணயம் செய்வதற்காக, செல்வம் கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
மாநகராட்சி வருவாய் ஆய்வாளா் பாஸ்கரன் (55), வருவாய் உதவியாளா் லட்சுமணன் (45) ஆகியோா் சொத்து வரி நிா்ணயம் செய்ய லஞ்சமாக ரூ.50 ஆயிரம் கேட்டனராம். செல்வம் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா். இதையடுத்து, பாஸ்கரன், லட்சுமணன் ஆகியோா் மூன்று தவணைகளாக பணத்தை கொடுக்கும்படி கூறினராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், இது குறித்து கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செல்வத்திடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினா். இந்தப் பணத்தை கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பாஸ்கரன், லட்சுமணன் ஆகியோரிடம் செல்வம் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. என்.தேவநாதன் தலைமையிலான போலீஸாா் பாஸ்கரன், லட்சுமணன் ஆகியோரை பிடித்தனா். தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்திலேயே அவா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், அந்த அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி, இருவரையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.