ஹேமந்த் இயக்கத்தில், இமான் இசையில், நடிகர் சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் என பலர்  நடித்துள்ள படன் தான் “காரி”.

சரி விமர்சனத்தை பார்ப்போம் வாங்க….. 

ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை அரசாங்கம் குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது, இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம் சென்னையில் சசிகுமார் மற்றும் அவரது அப்பா நரேன் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகின்றனர். இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன்.  ஒரு ஊர் 18 காளைகளை போட்டியில் இறக்க, மற்றொரு ஊரை சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, வீட்டுக்கு ஒரு வீரர் என்று தேர்வு செய்யும் கிராம மக்கள் வெள்ளைச்சாமி குடும்பத்தை சேர்ந்த வாரிசையும் இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரை தேடி சென்னைக்கு புறப்பட, வெள்ளைச்சாமி கிடைத்தாரா? ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? இல்லையா? அதன் மூலம் அந்த ஊருக்கு எத்தகைய நன்மை கிடைத்தது? என்பதே காரி படத்தின் கதை. 

சேது என்ற வேடத்தில் வெள்ளைச்சாமியின் வாரிசாக நடித்திருக்கும் சசிகுமார், முதல் பாதியில் சென்னை தமிழ் பேசும் சென்னை வாசியாக வலம் வருபவர், இரண்டாம் பாதியில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞராக மாறி தன் மக்களுக்காகவும், ஊருக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்த இந்த கதையில் பார்வதி அருண் சிறப்பாகவே நடித்திருந்தார், அவருடைய அப்பாவாக பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துள்ளார். மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த்.  இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் மையக்கருவும், அதை படமாக்கிய விதமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் வலு சேர்த்திருக்கிறது. 

மொத்தத்தில் இந்த “காரி” வீரம் நிறைந்தவன்……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here