காலங்களில் அவள் வசந்தம் திரைவிமர்சனம்

0
92

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.

மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடக்கூடிய கௌசிக்கின் பாத்திரப் படைப்பு நன்றாக இருக்கிறது. அதுவே நாயகி அஞ்சலி நாயரைக் கவர்ந்து விட, கண்டதும் காதல் அல்ல கண்டதும் கல்யாணமே செய்து கொண்டு விடுகிறார். இந்த அதிரடி முடிவால் அஞ்சலியை காதலிக்கவும் முடியாமல் காதலி ஹீரோஷினியை கைவிடவும் முடியாமல் கௌஷிக் படும் பாடு எதார்த்தமாக இருக்கிறது.

ஹிரோஷினியிடம் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாமல் அவர் படும் பாடு பரிதாபம். ஆனால் ஹீரோஷினியும் தன்னுடைய இன்னொரு காதலனை பிரேக் அப் செய்துவிட்டு அதன் விளைவாகத்தான் தன்னை தேடி வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளும்போது நன்றாக நடித்திருக்கிறார் கௌஷிக்.

நாயகி அஞ்சலி நாயர், இதுவரை பார்த்த படங்களில் இருந்தும் கூட இதில் மிக அழகாக தெரிகிறார். அவர் சொல்படியே நாயகன் ஒரு ‘தத்தி ‘யாக இருந்தாலும் இப்படிப்பட்டவன் தான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக கல்யாணம் செய்து கொள்வதிலும், அவனது அன்பை பெற முடியாமல் ஏங்குவதிலும் அற்புதமாக செய்திருக்கிறார் அஞ்சலி.

அஞ்சலிக்கு அடுத்தபடியாக நம் கவனத்தை கவருவது காதலியாக வரும் ஹீரோஷினி தான். “மழையில வந்து மணிரத்தினம் ஹீரோ மாதிரி என்னை ப்ரொபோஸ் பண்ணியே அதை மறக்கவே முடியாது..!” என்று அவர் கௌசிக்கை கரெக்ட் பண்ணும் போது தியேட்டரே அதிர்கிறது.

கௌசிக்கின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ கச்சிதமாக செய்திருக்கிறார். மருமகளின் நிலைக்கண்டு இறங்கி அவளை திடமான முடிவு எடுக்கச் சொல்லி வற்புறுத்திகளில் நல்ல மனிதனாகவும் தெரிகிறார் அவர்.

கௌசிக்கின் அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதனிடம்தான் தமிழ் கொஞ்சம் தகராறு செய்கிறது. ஆனால் கௌஷிக் ஏன் அப்படி இருக்கிறார் என்பதற்கு இந்த அம்மாவை பார்த்தாலே காரணம் புரிந்து விடுகிறது.

காமெடியனாக ஆர்ஜே விக்னேஷ்காந்த் காமெடி கொஞ்சம் எடுபடவில்லை…. 

இளமை ததும்ப வண்ண மயமாக ஒளிப்பதிவை மேற்கொண்டு இருக்கும் கோபி ஜெகதீஸ்வரனுக்கு முழு பாராட்டுகள். ஹரி எஸ்.ஆரின் இசையும் மிகச் சரியாகவே இருக்கிறது. ஒரே இடத்திலேயே கதை நகராமல் நின்று கொண்டு இருப்பது ஒரு வித அலுப்பை தந்தாலும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை படம் பிடித்து காட்டி இருப்பதிலும், இளமையின் கைபிடித்து கதையை நடத்திச் சென்றிருப்பதிலும் இயக்குனர் தேர்வாகி விடுகிறார்.

இந்த “காலங்களில் அவள் வசந்தம்” காதலர்களுக்கு உற்சாகம்……. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here