இது குறித்து அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளையானது கடந்து 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா சகோதரர், சத்யநாராயண ராவ் மற்றும் முரளி பிரசாத் ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ரஜினிகாந்த் பவுண்டேஷன் விளிம்பு நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவசமாக TNPSC தேர்வுக்கான பயிற்சி அளிப்பது, இலவச புத்தகங்கள் வழங்குவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழக காவல்துறையில் சேர்வதற்காக தயாராகி வரும் ஏழை மாணவர்களுக்கும், சினிமா துறையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி உள்ளிட்ட சேவைகளை இந்த அறக்கட்டளை மூலம் நடிகர் ரஜினிகாந்த் செய்து வருகிறார்.
ரஜினிகாந்த் அறக்கட்டளையானது யாரிடமும் எந்த அமைப்பிடமும் டொனேஷன்கள் வாங்குவது கிடையாது என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் மும்பையில் உள்ள பெனிசுலா டவர் பிசினஸ் பார்க் என்ற முகவரியில் செயல்பட்டு வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் மற்றும்
அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி உள்ளதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் நிறுவியதற்கான வெற்றியை கொண்டாடுவதற்காக லக்கி ட்ரா போட்டி நடத்தப்பட உள்ளதாகவும் மேலும் தொலைபேசி எண் மூலம் போலியாக கணக்கு துவங்கி இருநூறு நபர்களை அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்குவதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கோயம்புத்தூர், பீகார், திருவனந்தபுரம் மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் ரஜினிகாந்த் அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறாக நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்யப்படுவதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவிற்கு புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.