சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கௌவரப்படுத்தும் விதமாக விடியோ ஒன்றினை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவை கேப்டனாக வழிநடத்துவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் கொடுத்துவிட்டு சாதாரண வீரராக எம்.எஸ்.தோனி தொடர் முழுவதும் விளையாடினார். கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார் எம்.எஸ்.தோனி. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சிஎஸ்கேவின் ரசிகர்கள் தங்களது நாயகனைக் காண மைதானம் நோக்கிப் படையெடுத்தனர்.
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நேற்று முன் தினம் (மே 18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த கடைசி வரை போராடினார்கள். இருப்பினும், அவர்களது போராட்டம் வீணானது. பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. சென்னை அணியில் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனியைக் காண போட்டி நடைபெறும் மைதானங்களை நோக்கிப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டத்தின் விடியோவினை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 161 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.55 என்பது குறிப்பிடத்தக்கது.