சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் தன்பாலின டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலியில் அறிமுகமான நபர், மாணவரிடம் ஆபாசமாகவும், நெருக்கமாகவும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரகசிய இடத்தில் சந்திக்க மாணவரை வரச் சொல்லி, கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் வீடியோவாக எடுத்து, பணம் மற்றும் நகையை கேட்டு கும்பலாகச் சேர்ந்து மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்துபோன கல்லூரி மாணவரிடம் இருந்து 13 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பதும் தெரியவந்தது.
டேட்டிங் செயலியில் போலியான பெயரில் ஐடி உருவாக்கி, பலரை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், புகைப்படங்களை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.