தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரி யை சேர்ந்த பிரவீன் (22), புதுகோட்டை யைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரி யை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் மூன்று பேரும் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று இருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பினர்.  பின்னர் இரவில் மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

திடீரென பிரவீன் உள்ளிட்ட  3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர். உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3, பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட உணவு பொருள் அதிகாரி சித்ரா கடைக்கு வந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கடைக்கு உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து, கெட்டு போன உணவு பொருள்களை, கடை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் அப்புறப்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் உணவு பொருள்களை பின்புறமாக காரில் வைத்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here