கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’.
உறவுகள் இல்லாமல் சென்னையில் தனியாக வசிக்கும் வெற்றிவேல் (சந்தானம்) திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சொந்த வீடு, நல்ல வேலை.. என மணமகனுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்கிறார். இதற்காக அவர் நண்பர் ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி, வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணப்பெண்ணிடமும் மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் ‘கடனை அடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்’ என வெற்றிவேல் நிபந்தனை விதிக்கிறார்.
இதனால் அவரது திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ரத்தினபுரி ஜமீனின் (தம்பி ராமையா) ஒரே பெண் வாரிசான தேன்மொழி (பிரியாலயா) யை கண்டதும் காதல் கொள்கிறார். ரத்தினபுரி ஜமீன் என்றதும் தன்னுடைய நிபந்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்… கடனிலிருந்து மீண்டு விடலாம் என நினைக்கும் சந்தானத்திற்கு தேன்மொழிவுடன் திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருப்பது தெரிய வருகிறது. இதுக்கு நடுவுல சந்தானத்திற்கு கடன் தந்த விவேக் பிரசன்னா, சந்தானத்தோட வீட்ல நடக்கும் விபத்துல இறந்து போய்டுறாரு. இந்த விபத்தை மறைச்சு அப்பாடான்னு மூச்சு விடுற நேரத்துல விவேக் பிரசன்னா உயிரோட வர்றாரு. பிறகு சந்தானம் என்ன செய்தார்? நடந்தது என்ன? என்பதே கதை.
சந்தானம் ஒன் லைன் பஞ்ச் காமெடி சிரிக்க வைக்கிறது. நடிகர் விவேக் பிரசன்னாவின் இரட்டை வேடம் நடிப்பு ரசிக்க வைக்கிறது. தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர். இமான் இசை ஓகே தான். மனோ பாலா உடல் பாவனை நகைச்சுவை சொல்லவா வேண்டும் தன்னை அறியாமலேயே சிரிக்க வைத்து விட்டார்.
வெடி குண்டு காட்சி எதற்கு அய்யா? கதையிலும், பாடலிலும், சில காமெடி காட்சியிலும் சற்று சொதப்பல் செய்து விட்டார் இயக்குனர். அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இங்க நான் தான் கிங்கு – ரசிகர்கள் கையில் நொங்கு……