இந்தியா இமாலய வெற்றி!

சென்னை:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்தியா 0-1 என, பின்தங்கி இருந்தது. இரண்டாவது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 134 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்தது. பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. லாரன்ஸ் (19), ரூட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் 429 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். அஷ்வின் ‛சுழலில்’ லாரன்ஸ் (26), பென் ஸ்டோக்ஸ் (8) சிக்கினர். அக்சர் படேல் பந்தில் போப் (12) அவுட்டானார். குல்தீப் யாதவ் பந்தில் பென் போக்ஸ் (2) சரணடைந்தார்.

தொடர்ந்து அசத்திய அக்சர் படேல் பந்தில் ஜோ ரூட் (33), ஸ்டோன் (0) அவுட்டாகினர். குல்தீப் பந்தில் மொயீன் அலி (43) சரணடைந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஸ்டூவர்ட் பிராட் (5) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல் 5, அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என, சமநிலையடைந்தது.

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178