புதுடெல்லி:
 
சீன படைகளின் அத்துமீறல் காரணமாக இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 
 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள், பட்டியலிடப்படும் மசோதாக்கள் உள்ளிட்ட அவை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
 
அப்போது, எல்லையில் சீனா அத்துமீறல் தொடர்பான பிரச்சனையும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
 
எனவே, சீனா அத்துமீறல், இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ராணுவ நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
 
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பாராளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம், தனிநபர் மசோதாவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here