வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி நூலிழையில் தோல்வியடைந்து தொடரை தவற விட்ட நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று விளையாடியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ், இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களத்தில் இறங்கினர். வழக்கமாக கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் நிலையில், இன்று பேட்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டது.
ஷிகர் தவான் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் இணைந்த விராட்கோலி – இஷன் கிஷன் இணை அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 290 ரன்களை சேர்த்தது. இஷன் கிஷன் 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 24 பவுண்டரிகளும் அடங்கும்.
இதேபோன்று விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களை எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 409 ரன்களை குவித்தது. இதையடுத்து 410 ரன்கள் என்ற மிகக் கடினமான இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். இதில் கேப்டன் கேப்டன் லிட்டன் தான் 29 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 43 ரன்களும், யாஸிர் அலி 25 ரன்களும், மகமதுல்லா 20 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வங்கதேச அணி 34 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பந்துவீச்சை பொருத்தளவில் ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இரட்டைச் சதமடித்த இஷன் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.