சென்னை நுங்கம்பாக்கம், வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்பவர் தேவி (வயது 38-பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்காலிக ஊழியரான இவர் மணலி பகுதியில் வசிக்கிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். இரண்டு மகள்கள் உள்ளனர். தேவி சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக பணி செய்கிறேன். வருமானவரி அலுவலகத்தில் மூத்தவரி உதவியாளராக பணி செய்யும் ரெக்ஸ் கேப்ரியேல் (36) என்பவர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார். அவரது ஆசைக்கு இணங்கும்படி செல்போனிலும் பேசி தொல்லை கொடுக்கிறார். திடீரென்று அவர் என்னை பின்பக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவர் மீது உயர் அதிகாரிகளிடம் வாய்மொழியாக புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 14-ந்தேதி அன்று தரையில் தண்ணீர் கொட்டி இருப்பதாகவும், அதை துடைக்க வரும்படியும் என்னை அழைத்தார். நான் தண்ணீரை குனிந்து துடைத்துக்கொண்டிருக்கும்போது, கட்டி அணைத்து எனக்கு முத்தம் கொடுக்க முயன்றார். நான் அவரை தள்ளிவிட்டு, தப்பித்தேன். அவரது இம்சை தாங்க முடியாமல் நான் தற்கொலைக்கு கூட முயன்றேன். எனது மகள்களுக்காக நான் உயிர் வாழ வேண்டி உள்ளது. வேலையையும் விட முடியவில்லை. நாளுக்கு நாள் அவரது பாலியல் தொல்லை உச்சமாக போகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னை அவரிடம் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தேவி கூறி இருந்தார்.
இந்த புகார் மீது ஆயிரம்விளக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ரத்னா பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். குற்றம் சுமத்தப்பட்ட வருமானவரி மூத்த உதவியாளர் ரெக்ஸ் கேபிரியேல் அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.