சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், பத்து தல திரைப்படம் பார்ப்பதற்காக நேற்று சென்ற நரிக்குறவர் பழங்குடியின மக்கள் 10 பேருக்குத் திரையரங்கு ஊழியர் அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர்கள் என்பதற்காகத் திரையரங்க ஊழியர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து, பிரச்னை பெரிதானதை உணர்ந்த திரையரங்க நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதித்தது. இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ரோகிணி திரையரங்கிற்கு வட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
நரிக்குறவ சமூக மக்களை உள்ளே விட மறுத்த ரோகிணி திரையரங்க நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு ரோகிணி திரையரங்க நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ரமேஷ்பாபு முன்னிலையில் நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.