தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இன்று முதல் மார்க்கெட்டுகள், கடை வீதிகள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. தடை விதிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டத்தையும், கடைகளில் கூட்டத்தையும் கண்காணிக்கிறார்கள்.

தொற்று பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கத் தொடங்கி உள்ளது. நெரிசல் மிகுந்த கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. சானிடைசர், அனைத்து கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்கிறார்கள். ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி அளவுக்கு அதிகமான கூட்டத்தை கூட்டும் கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்கள் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும், மேலும் அந்த பகுதியும் மூடப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகிறது. இன்று முதல் முக்கிய இடங்களில் போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கின்ற கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக அனைத்து கடைகள் முன் பகுதியில் சானிடைசர் வைக்கவேண்டும். ஒரே நேரத்தில் பொதுமக்களை அதிகளவு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரவேண்டும். தேவை இல்லாமல் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த ஒரு வாரத்தில் சென்னை மக்கள், வியாபாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

பொதுமக்கள் தெருக்களில், கடை வீதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here