ஐசிஎப் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில் ஐசிஎப் பொதுமேலாளர் திரு பி.ஜி.மால்யா அவர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டு ஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஐசிஎப் தொழிற்பயிற்சி மையம், ஐசிஎப் பள்ளிகளின் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் உரையாற்றுகையில் ஐசிஎப் இந்த தயாரிப்பு ஆண்டில் இதுவரை 2000 ரயில்பெட்டிகளை தயாரித்திருப்பதாகவும், அவற்றுள் 7 பெருமைமிகு வந்தேபாரத் தொடர்களும், 8 நெடுந்தொலைவு புறநகர் ரயில்தொடர்களும், 2 குளிர்வசதி செய்யப்பட்ட புறநகர் ரயில்தொடர்களும், 3 விபத்துதவி ரயில் தொடர்களும் அடங்கும் என்றும் இவ்வாண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஐசிஎப் 1110 குளிர் வசதி ரயில்பெட்டிகளை தயாரித்து சாதனை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ரயில்வே வாரியம் ஐசிஎப்பின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத் திறன்கள் மேல் நம்பிக்கை வைத்து வெகு குறைந்த கால அவகாசத்தில் விஸ்டடோம் சுற்றுலாப்பயணிகள் உணவக ரயில்பெட்டி, வந்தே பாரத் வடிவமைப்பில் கதிசக்தி சரக்கு ரயில் தொடர், அலுவலகம் போன்ற ரயில்பெட்டி, நீராவி ரயில்போன்ற வடிவமைப்புடன் கூடிய தானியங்கி ரயில் தோடர், மஹாமெட்ரோ ரயில் தொடர்கள் போன்றவற்றை தயாரித்தளிக்க ஆணையிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் பெற்றுள்ள மிகப்பெரும் வரவேற்பை தொடர்ந்து ஐசிஎப் தற்போது படுக்கை வசதி கொண்ட பயணிகளுக்கு சுகமான பயணத்தை உறுதி செய்ய உலகத் தரத்திலான வந்தே பாரத் ரயில் தொடரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐசிஎப் குழுவின் ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பினால் இந்த ரயில் வெகு விரைவில் தயாரித்தளிக்கப்படும் என்றும் திரு மால்யா தெரிவித்தார்.

அவரது உரையில், மாலத்தீவுகளில் நடைபெற்ற ஆசிய பாடிபில்டிங் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற திரு ஹரிபாபு, காமன்வெல்த் சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற திரு ஷ்யாம் நிகில் போன்ற ஐசிஎப் விளையாட்டு வீரர்கள் இந்திய மற்றும் உலக அரங்கில் இந்திய ரயில்வேயின் பெயரை பெருமை பெறச் செய்வதாக குறிப்பிட்டார்.

விழாவின் நிறைவாக ஐசிஎப் தொழிற்பயிற்சி மைய மாணவ மாணவியர் பங்கேற்ற கயிறு யோகா, மல்லாகம்பம் மற்றும் தேசியப்பாடல் நாட்டியங்கள் அரங்கேறின. விழாவில் ஐசிஎப் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here