அம்பத்தூரில் இரு தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
அதில், இறந்தவர் பெயர் பவித்ரா(27) என்பதும், அவர் காதலித்து திருமணம் செய்த முதல் கணவரை பிரிந்து ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு கொலை நடந்த இடமான அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் உடலை கைப்பற்றிய போது இரண்டாவது கணவரான ராஜா தலைமறைவானது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தனிப்படை போலீசார் தலைமறைவான ராஜாவை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ராஜா பதுங்கி இருந்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ரயில் நிலையம் விரைந்து பதுங்கி இருந்து ராஜாவை நோட்டமிட்டனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற ராஜாவை காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பவித்ராவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ‘எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், நான் அவளை சரமாரியாக தாக்குவேன். கொலை நடந்த அன்று நான் மது அருந்துவதற்கு பணம் கேட்டபோது பவித்ரா மறுக்கவே அவள் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கினேன். வலி தாங்காமல் அவள் தன்னை விடுமாறு கத்திக் கூச்சலிட்டு துடி துடித்தால். பின்னர் பவித்ரா இறந்ததை உறுதி செய்த பிறகு தப்பி ஓடி விட்டேன், இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு அம்பத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.