மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எருக்கஞ்சேரியை சேர்ந்த சித்ரா, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவர் கந்துவட்டி கொடுமையால் இறந்து போனார். இந்நிலையில், கடந்த 2018ல் எங்களுக்கு சொந்தமான வீட்டை எனது கணவரிடம் இருந்து எழுதி வாங்கி விட்டதாகவும், வீட்டில் இருந்து வெளியேறும்படியும் பெண் ஒருவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் கொடுங்கையூர் போலீசில் எங்கள் மீது பொய் புகார் அளித்தார்.
அப்போதைய கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் கல்வியரசன் ஆகியோர், வீட்டை காலி செய்து அந்த பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என என்னை மிரட்டினர். இதற்கு மறுத்ததால் என்மீதும், எனது மகன் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாங்கள் கைது செய்யப்பட்டதை மாஜிஸ்திரேட் ஏற்காததால் விடுவிக்கப்பட்டோம். விசாரணை என்ற பெயரில் போலீசார் எங்களை தாக்கினர். எனவே, சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, மனுதாரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் கல்வியரசன் ஆகியோர் பொய் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிகிறது. இதன் மூலம் அவர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவரிடம் இருந்து தலா ரூ.2.5 லட்சம் வீதம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும் அவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.