கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து அடுத்த நாளே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதன் காரணமாக மே 3 -ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் பொதுத்தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் மே 3-ம் தேதி நடைபெற இருந்த முதலாவது (மொழிப்பாடம்) தேர்வு மே 31-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-2021-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளதால் மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மொழித்தேர்வு மட்டும் மே 31-ம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.