கட்சியினர் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்- நீதிமன்றம்
தேர்தல் பிரசாரங்களின் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
தற்போது பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றனர்.
இதனால் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, பேஸ்புக், டுவிட்டர் மூலம் பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‛அண்மை காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இராண்டாவது அலையாக இருக்கலாம். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது’ எனக்கூறி பிரசாரங்களுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
அதேநேரம், பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.