திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மீஞ்சூர் அக்கரமேடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 12 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்களது வீட்டின் எதிரே தென்னை ஓலையில் கட்டப்பட்ட குளியலறை உள்ளது. இதன் அருகே அந்த பகுதியை சேர்ந்த வெங்கட் என்கிற வெங்கடாஜலபதி நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கூச்சலிடவே வெங்கட் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் குளித்து கொண்டிருந்த போது குளியலறைக்கு சென்ற தாய் உள்ளே சிறிய ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை கைப்பற்றினார்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவரை மீஞ்சூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
சிறுமிகள் குளியலறையில் இருப்பதை படம் பிடித்த குற்றவாளி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளியலறையில் படம் பிடிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சிறுமிகள் இருவரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.