வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி எழிலரசி (வயது40). கோபாலகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
எழிலரசி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி எழிலரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேலை செய்து வந்த அதே வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் 21-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஒரு மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முகம் சுழிக்காமல் கனிவாக பேசி சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் எழிலரசி கொரோனாவுக்கு பலியான சம்பவம் அவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 5 டாக்டர்கள் 5 நர்சுகளுக்கு தொற்று பாதித்துள்ள சம்பவம் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் மருத்துவத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கர்ப்பிணி டாக்டர் கார்த்திகா கொரோனாவுக்கு நேற்று பலியானார். இந்த நிலையில் இன்று குடியாத்தம் நர்சு கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.