இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சனிக்கிழமை (பிப்.17) விண்ணில் செலுத்தப்படுகிறது. வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கவுன்ட்டவுன்: ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.
இதற்கு முன்பு இஸ்ரோ சாா்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இன்சாட்-3டி மற்றும் 3 டிஆா் திட்டங்களின் தொடா்ச்சியாக தற்போது இன்சாட்-3டிஎஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.