திண்டுக்கல்:
விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய கஞ்சா வியாபாரிகள் 6 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன்,மாதவன், தாமரைக்கண்ணன், ராஜா உட்பட 9 பேர் நேற்று விசாகப்பட்டினத்திற்கு அங்கிருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்க சென்றனர். அங்கு சென்னையை சேர்ந்த ஒருவர் இவர்களுக்கு 30 கிலோ கஞ்சா வாங்கி கொடுத்தார். அதை வாங்கிய 9 பேரும் விசாகப்பட்டினத்திலிருந்து பஸ்சில் திருச்சிக்கு கஞ்சாவை கடத்தி வந்தனர். திருச்சியிலிருந்து நேற்று மதியம் சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன் ஆகியோர் முதல் கட்டமாக அரசு பஸ்சில் ஏறி திண்டுக்கல்லுக்கு வந்தனர். மீதமுள்ள 6 பேரும் வடமதுரை அய்யலுாருக்கு வேறு ஒரு அரசு பஸ்சில் ஏறி வந்தனர்.
இதையறிந்த திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் டி.எஸ்.பி.,சுந்தரபாண்டியன்,இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ.முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு வரும் அரசு பஸ்,கார் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல்லுக்கு வரும் அரசு பஸ்சிலிருந்தசுப்பிரமணி,மதன்குமார்,மதுபாலன் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அய்யலுார் வண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே பதுங்கியிருந்து கஞ்சாவை சிறிய சிறிய பொட்டலங்களாக கூட்டாளிகள் தரம் பிரித்து கொண்டிருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டதும் கஞ்சாவை தரம்பிரித்து கொண்டிருந்தவர்கள் தப்ப முயன்றனர். அதில் மாதவன், தாமரைக்கண்ணன், ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர். மீதமுள்ள மூவரும் தப்பினர். போலீசார் 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.