திருப்போரூரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 27). இவர் வேலை காரணமாக சென்னை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் சொந்த ஊருக்கு தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இரவு வந்து கொண்டிருந்தார்.
 
அப்போது இளம்பெண் ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு அவரை வழிமறித்துள்ளார். இதையடுத்து கணேஷ் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தியுள்ளார். உடனே அந்தப் பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகளான 3 வாலிபர்கள் விரைந்து வந்து கணேசை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர்.
 
இதையடுத்து கணேஷ் சத்தம் போட்டு அலறவே, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர், அதில், பிடிபட்டவர்கள் மதுரவாயல் அபிராமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (25), உதயகுமார் (19), நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25), பரசுபாலன் (19) என்பது தெரியவந்தது.
 
இதில் முத்துலட்சுமி இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்களிடம் ‘லிப்ட்’ கேட்பது போல நடிப்பதும், உடனே மறைந்திருக்கும் கூட்டாளிகள் கத்திமுனையில் வழிப்பறி செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளது தெரியவந்தது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here