ஓட்டல் அறையில் அடைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தங்களது மகள் மாயமானதாக பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் மாயமானதாக கூறப்பட்ட சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு பிறகு தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். தன்னை 3 வாலிபர்கள் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி மீண்டும் போலீசில் புகார் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த மணி (26), குன்றத்தூரை அடுத்த சிக்கராயபுரத்தை சேர்ந்த கார்த்தி (23), செல்வராஜ் (23), ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஓட்டலில் அறை எடுத்து தங்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் மணி உள்பட 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.