சென்னை:
சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலைய குற்றப் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) பணிபுரிபவர் பாலமுருகன். இவர் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வைத்தியநாதன் பாலம் அருகில் 6 பேர் கும்பலாக சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எஸ்.ஐ பாலமுருகன் விசாரணை நடத்தினார்.
போதையில் இருந்த அவர்கள் பாலமுருகனிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். திடீரென அவரை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் தலை, மூக்கு, காது, முகம் என பல இடங்களில் காயமடைந்து நிலைகுலைந்த எஸ்.ஐ அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த ஆர்.கே.நகர் போலீஸார் நிகழ்விடம் விரைந்து காயம் அடைந்த எஸ்ஐ பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தாக்குதல் தொடர்பாக உதவி ஆணையர் இதயம் மேற்பார்வையில் ஆர்.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், கஞ்சா போதையில் 16 மற்றும் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 6 பேர் எஸ்ஐ பாலமுருகன் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. 4 பேர் பிடிபட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் 3 பேர் போலீஸ்காரர் ஒருவரை விரட்டி, விரட்டி தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எஸ்ஐ ஒருவர் மீது போதை மாணவர்கள் தாக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.