திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மைத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்.பி.கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகான முதல் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதில் மகிழ்ச்சி. தி.மு.கவிற்கு பெரும்பான்மை வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. வெற்றிச் செய்தி வந்த போதும் கொரோனா பரவைலைத் தடுப்பது குறித்தே ஆலோசித்தேன். தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தி தொடங்கும்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நிபுணர் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ₹25 கோடி மருந்து வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 34,000 பேருக்கு நாளொன்றுக்கு தொற்று ஏற்படுகிறது. ஊரடங்கால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளைய தினம் நடைபெறும் நிபுணர்கள் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.