மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சிகிச்சை பெறும் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.
கொரோனாவின் கொட்டத்தை அடக்க மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நாளுக்கு நாள் தொற்று நோய் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு திணறி வருகிறது.
இதனால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்தது. இதற்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று இரவு 8.30 மணிக்கு சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மாநிலம் முழுவதும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தார். ஆனால் இது முழு ஊரடங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
அதன் விவரம் வருமாறு:-
* மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
* சரியான காரணமின்றி யாரும் வீட்டை விட்டு பொது இடங்களுக்கு வரக்கூடாது.
* அனைத்து பொது இடங்களும் மூடப்படும்.
* மருத்துவம், மளிகைகடை, பால், பேக்கரி, காய்கறி, பழம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
* அத்தியாவசிய தேவைகளுக்காக பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பொது போக்குவரத்தில் நின்று செல்ல அனுமதி இல்லை. முக கவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம்.
* டாக்சி, ஆட்டோ அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிக்கப்படும். ஆட்டோவில் டிரைவர் மற்றும் 2 பயணிகளுக்கு அனுமதி. டாக்சியில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி.
* தனியார் பஸ் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி. இதில் விதிமுறை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
* வீடுகளுக்கு சென்று உணவு வினியோகிக்க அனுமதிக்கப்படும். சாலையோர உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.
* பத்திரிகைகளை வினியோகிக்க அனுமதி.
* சினிமா தியேட்டர், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்காத கடைகள், மால்களுக்கு அனுமதி இல்லை.
* மத வழிபாட்டு தலங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
* பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
மேற்கண்ட உத்தரவுகள் இன்று (புதன்கிழமை) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருகிறது. மே 1-ந் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும்.
முழு ஊரடங்கு அமலாவதால் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்க மராட்டிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.