சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசன் சென்னையில் நாளை தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த சீசன் முழுவதும் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாள்களில் போட்டி நடைபெறுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்னதாக சேப்பாக்கம் செல்லும் பேருந்துகளில் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், போட்டி முடிந்து 3 மணிநேரத்துக்கு சேப்பாக்கத்திலிருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் மாநகரப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்த்து கொள்ளலாம். மாநகர குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இது பொருந்தாது.
கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலவச பயணத்தை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது மாநகரப் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத் துறையின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.