பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டில் 3வது முறையாக தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமல்படுத்த உத்தரவிட்டார், மேலும் மூன்று வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கூறினார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அடுத்ததாக 4வது இடத்தில் உள்ளது பிரான்ஸ். கடந்த பிப்ரவரிக்கு பின்னதாக பிரான்ஸில் தினசரி கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்துள்ளது. அங்கு ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,000ஐ கடந்திருக்கிறது.
இங்கு கொரோனா 3வது அலையை தடுக்கும் நோக்கில் 3வது முறையாக பொதுமுடக்கத்தினை அமல்படுத்துவதாக அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருவதாலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருவதாலும் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது என்ற கொள்கையை சமரசம் செய்து கொண்டு தேசிய பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதாக அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு மெக்ரான் ஆற்றிய உரையில், “இப்போது நாம் செயல் படாவிட்டால், கட்டுப்பாட்டை இழப்போம்” என தெரிவித்தார்.
தேசிய பொதுமுடக்கம் பிரான்ஸில் வரும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக ஐரோப்பாவில் கொரோனா பரவல் அதிகரித்த போது அங்கு பல நாடுகளும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை அறிவித்த போது, பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என காரணம் காட்டி பொதுமுடக்கத்தை அப்போது அமல்படுத்த மாட்டேன் என அதிபர் மெக்ரான் உறுதியுடன் இருந்தார்.
தலைநகர் பிரான்ஸ், வடக்கு மற்றும் தெற்கின் சில பகுதிகளில் ஏற்கனவே இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய அளவில் அடுத்த ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும். இந்த வாரத்துடன் அடுத்த 3 வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.
இதனிடையே பிரான்ஸில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லாமல் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் வெறும் 12% அளவு மக்களுக்கே அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.