இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூரில் வியாழக்கிழமையும், பார்த்திபனூர், சாயல்குடியில் சனிக்கிழமையும், கமுதியில் செவ்வாய் கிழமை, கடலாடியில் வெள்ளிக்கிழமை மற்றும் பெருநாழி, கோவிலாங்குளம், சத்திரக்குடி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாரச்சந்தை நடந்து வருகிறது.இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் விலை குறைந்து விற்கப்படும் காய்கறி, பழங்கள், கருவாடு, பலசரக்கு உள்ளிட்ட உணவு பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், கால்நடைகள், உடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் வாரச்சந்தை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும்,
இதனை தொடர்ந்து இரும்புபட்டறை மற்றும் கடைகளில் மட்டும் கிடைக்கின்ற கோடாரி, கடப்பாரை, மண்வெட்டி, கொத்துவான், இலை, தழை பறிக்கும் கத்தி, அரிவாள்மனை, வீட்டு உபயோக அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை வாரச்சந்தைகளில் வடமாநில தொழிலாளர்கள் தற்காலிக பட்டறை அமைத்து, சூட்டோடு சூடாக விற்பனை செய்து வருகின்றனர். கட்டுபடியாகும்விலைக்கு தருவதால் விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
இது குறித்து போபால் வியாபாரிகள் கூறும்போது, மத்திய பிரதேசம், போபாலில் இருந்து 10 குடும்பத்தினர் வந்துள்ளோம். ஆண்டு தோறும் விவசாய காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் மதுரை வந்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள நகர பகுதிகள் மற்றும் வாரச்சந்தை நடக்கின்ற ஊர்களில் தற்காலிக பட்டறை அமைத்து பொருட்களை விற்பனை செய்கிறோம்.
கடப்பாரை, மண்வெட்டி, கொத்துவான், கோடாரி உள்ளிட்ட வேளாண் கருவிகள், அரிவாள்மனை, சமையல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட வீட்டு உபயோக கருவிகள் தயாரித்து கொடுக்கிறோம்.
ரூ.50 முதல் ரூ.600 வரையிலும்பொருட்களுக்கு ஏற்றவாறு விற்பனை செய்கிறோம். விவசாயிகள், பொதுமக்கள் கண்ணுக்கு முன்னேயே கடுமையான உழைப்புடன் தயாரித்து கொடுப்பதால், அவர்களும் எங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பணம் கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். இதனால் நல்ல விற்பனை நடந்து வருகிறது என்றனர்.