கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரிக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது. தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது கிராமிற்கு ரூ. 400 குறைத்து தங்கம் வாங்கி தருவதாக கூறினாராம். இதை நம்பி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டேரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசினாராம்.
அதற்கு பண்டேரிநாதன் உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு முருகன் 2 கிலோ வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது. 2 கிலோ தங்கத்திற்கும் 96 லட்சம் எடுத்துக் கொண்டு உடனே வாருங்கள். இல்லையென்றால் வேறு நபருக்கு கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார்.
இதை கேட்ட முருகன் நான் பணத்துடன் வருகிறேன் என கூறி கருப்பம்புலத்திற்கு 96 லட்சத்துடன் வந்துள்ளார். அப்போது பண்டேரிநாதன் 96 லட்சம் பணத்தை பெற்று கொண்டு 850 கிராம் எடைக்கொண்ட 46 லட்சம் மதிப்புடைய தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி விட்டாராம். பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோது பாக்கி தங்கத்தை கொடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ்சார் மோசடியில் தொடர்புடைய கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டேரிநாதன், கார் டிரைவா் திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த பாலகுமார், திருத்துறைப்பூண்டி சேர்ந்த துர்க்காதேவி, கருப்பம்புலம் செல்லத்துரை, வடமழைமணக்காடு தனுஷ்கொடி, திருத்துறைப்பூண்டி மணிமாறன் ஆகி 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஏழு பேரையும் சிறையில் அடைத்தனர்.