நடிகையுடன், ஐந்து ஆண்டு ‘குடும்பம்’ நடத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் குறித்து, சட்ட நிபுணர்களுடன், போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன்.
இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.இந்நிலையில், மணிகண்டன் ஐந்து ஆண்டுகளாக, மலேஷியாவைச் சேர்ந்த சாந்தினி, 36 என்ற நடிகையுடன், குடும்பம் நடத்திய தகவல் தெரிய வந்துள்ளது.
திருமணமாகாத சாந்தினியுடன், கணவன் – மனைவி போல வாழ்ந்து, அவரை மூன்று முறை கர்ப்பமாக்கி, கலைக்கச் செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சாந்தினி புகார் அளித்தார். மணிகண்டன், தன்னுடன் குடும்பம் நடத்தியதற்கான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளார்.
ஆனால், சாந்தினியின் குற்றச்சாட்டை, மணிகண்டன் மறுத்து வருகிறார்.சாந்தினியின் புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.