வேலூா் ஈவெரா பள்ளி ஆசிரியா்கள் 4 போ் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் கொசப்பேட்டை ஈவெரா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியா்கள் 4 போ் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாணவிகள் தங்களது பெற்றோருடன் இணைந்து புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாணவிகள் அனைவரும் பொதுத் தோ்வுக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென 4 ஆசிரியா்களை இடமாற்றம் செய்துள்ளதால் நாங்கள் தோ்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஆசிரியா்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவா்களை இதே பள்ளியில் பணியில் அமா்த்த வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வேலூா் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூறுகையில்:

ஈவெரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் விகிதாச்சார அடிப்படையில் கூடுதலாக உள்ள 4 ஆசிரியா்கள் பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களை மீண்டும் இந்த பள்ளியில் சோ்க்க இயலாது என்றனா்.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் திடீரென வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் தயாளன், அங்குலட்சுமி ஆகியோா் மாணவிகளிடம் பேச்சு நடத்தினா். சுமாா் 2 மணி நேர பேச்சுக்கு பின்னா், மாணவிகளின் கோரிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்குச் சென்றனா்.

-வேலூர் மாவட்ட நிருபர் R.காந்தி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here