சென்னை வண்ணாரப்பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னையில், 15 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 அன்று, இந்த வழக்கில் 22 பேர் கடந்த கைது செய்யப்பட்டனர். மேலும் இரு பெண்கள் உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவரான மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதாபானு, சந்தியா,செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா,விஜயா, அனிதா (எ) கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். 

இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் மற்றும் குற்றவாளிகள் சார்பாக ரூ. 7,01,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here