வாக்கு பதிவு முடிந்தது: வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி!

0
11

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அசாமில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் இன்று நடந்தது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சானிடைசர்கள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வாக்கு செலுத்த தொடங்கினர்.

ஒரு சில பூத்களில் ஈவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும் அவை உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக வாக்காளர்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணி பெண்கள், கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் விரைந்து வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். சைக்கிளில் வந்த விஜய், ரசிகரின் செல்போனை பறித்த அஜித், நடந்து வந்து வாக்குப்பதிவு செய்த விக்ரம், காத்திருந்து வாக்களித்த சூர்யா, கார்த்திக், சிவக்குமார் என சினிமா நட்சத்திரங்கள் வைரலாகினர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அ.தி.மு.கவினருக்கு இடையேயான மோதல், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அ.தி.மு.க எம்.பியுமான ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைத்த சம்பவங்கள் நடந்தேறியது.

சில வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் எங்களுக்கு பணப்பாட்டுவாடா செய்யவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சில ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது சின்னம் பொறித்த பேட்ச்களை அணிந்து சென்று வாக்கு செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வாக்காளர்களின் வாக்குகளை வேறுயாரோ பதிவு செய்த சம்பவங்கள் நடந்தன. இதனையடுத்து 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாக்களித்த நிகழ்வும் நடந்தது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் நடக்கும் நேரத்தில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க வகை செய்யப்பட்டது . கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பணியாளர்களும் கவச உடை அணிந்திருந்தனர்.

தி.மு.க எம்.பி கனிமொழி சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கொரோனா கவச உடையணிந்து வாக்களித்தார். அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனும் கொரோனா கவச உடையணிந்து வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களை சீல் வைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here