வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திவரும் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3.18 கோடி ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, விதிகளை மீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்பவர்களை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பாண்டிபஜார் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாகக் கூறப்பட்ட 14.59 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல தி.நகரில் இரண்டு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு தி.நகரில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக் கூறி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1.90 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
எம்.ஜி.ஆர்.நகரில் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் வங்கிக்கு சொந்தமானது என சொல்லப்பட்ட 1 கோடிய 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கொடுங்கையூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கமல்ஜெயின் என்பவர் கொண்டு சென்ற 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு கொண்டு செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நள்ளிரவில் நடத்திய அதிரடி வாகன சோதனையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஊழியர் சரவணன் எந்தவித ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 5 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வடபழனியில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிகளுக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தில் இருந்து 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறாக சென்னை முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 3.18 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.