சென்னை:

1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் வருகிற 20ந்தேதி வரை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

1 முதல் 9ம் வகுப்பு முடிய மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிந்ததால் இன்று முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. தேர்வு சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி பட்டியல் பதிவேடு தயார் செய்யும் பணிகள் காரணமாக அனைத்து ஆசிரியர்களும் 20ந்தேதி வரை பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்.

அரசு பொதுத்தேர்வு பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுகள் முடியும் வரை தேர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் 20ந்தேதிக்கு முன்னதாகவே மேற்குறிப்பிட்ட பணிகள் பள்ளி அளவில் முடிவுற்றால் அப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. வெளிநாடு செல்வதற்காக தடையின்மை சான்று பெற்றுள்ள ஆசிரியர்கள் இந்த பணிகளை விரைந்து முடித்த பின்னர் வெளிநாடு செல்லலாம். அவர்கள் தேவைப்படின் 20ந்தேதி வரை காத்திருக்க தேவையில்லை.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை பள்ளி வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களுடைய எண்ணிக்கையும், எமிஸ்ல் உள்ள மாணவர்களுடைய எண்ணிக்கையும் ஒப்பிட்டு முழு பதிவினை மேற்கொள்ள வேண்டும். இவற்றில் ஏதாவது வேறுபாடு இருப்பின் அவற்றை சரி செய்த பின்னர் உரிய சான்றிதழை வட்டார கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here