உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.
இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
உலகின் மாபெரும் அவதார புருஷன் நம் இறைமகன் இயேசு பிரான். அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகுக்கு உணர்த்தவே பிறந்து, கொடிய துன்பங்கள் தாங்கி, உயிர்த்தெழுந்தார் இறைமகன்.
இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது. உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள்.
உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி. ஈஸ்டர் கொண்டாட்டங்கள் சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு. மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.
மன்னிக்கும் மனப்பான்மை எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் கல்வாரி மலையில் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். அந்த நிலையிலும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசு. இந்த இறைகுணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பது கர்த்தரின் சித்தம். மனிதனுக்குள் இருக்கும் இறைவனை வெளிப்படுத்தல் அது.
விரதத்தின் மகிமை சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம்.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
வசந்த கால தொடக்கம் ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் ஈஸ்டர் மணிகள் என்ற மலர்கள் பல நிறங்களில் பூத்து மகிழ்விக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள். பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. புதிய வாழ்க்கையின் தொடக்கம் இயோஸ்டன் என்ற வசந்த கால தேவதையின் விலங்கு முயல். வசந்த காலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது. மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது, அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. முட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. முட்டையானது மறுபிறப்பின் குறியீடாகும் செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.