தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், தைவான் உள்பட ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் ஹூலியன் நகரத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.4ஆக பதிவானது. 1999ம் ஆண்டு 2,400 பேரை பலிவாங்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு தைவான் நாட்டில் தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
34 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் சாய்ந்தன. மலைகளிலுள்ள சுரங்கங்களும் இடிந்துள்ளன. இடிபாடுகளில் அந்நாட்டு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
எத்தனை மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என துணை அதிபர் லாய் சிங் டே தெரிவித்துள்ளார்.