கொரோனா காலம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளதால், கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி (சானிடைசர்) பயன்படுத்தப்படுகிறது. சானிடைசர் தண்ணீர் போன்றே இருப்பதால் சில இடங்களில் தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடிக்கக்கூடிய கவனக்குறைபாடு சம்பவம் நடைபெற்று விடுகிறது.

கடந்த 31-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப்பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநகராட்சி கமிஷனரே கவனக்குறைவாக சானிடைசரை குடித்த சம்பவம் மும்பை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. மும்பை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பரபரப்பாக இணை மாநகராட்சி ஆணையர் ரமேஷ் பவார் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது மேஜையில் தண்ணீர் பாட்டிலும், சானிடைசர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. அவர் பேசுவதற்கு தயாராகுவதற்கு முன் தண்ணீர் குடிக்க விரும்பினார்.

ரமேஷ் பவார் கவனக்குறைவாக தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக சானிடைசர் பாட்டியை எடுத்து குடித்தார். குடித்த பிறகுதான் அது சானிடைசர் எனத் தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட அவர் அதை விழுங்கவில்லை. உடனடியாக வெளியில் சென்று, வாயை சுத்தம் செய்தார். இதனால் மாநகராட்சி வளாகத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இணை மாநகரட்சி கமிஷனர் ரமேஷ் பவார் கூறுகையில்:

‘‘எனது பேச்சுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் பாட்டிலை திறந்து குடித்தேன். இரண்டு பாட்டில்களும் அங்கு இருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தன. அதனால் இந்த சம்பவம் நடைபெற்றது. குடித்த உடன் தவறை புரிந்து கொண்டேன். ஆனால் சானிடைசரை விழுங்கவில்லை’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here